ராகுல் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ராகு காலம் தான்!' - இல.கணேசன்

ராகுல் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ராகு காலம் தான்!' - இல.கணேசன்
Published on

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக எதுபற்றிக் கேட்டாலும்  வெளிப்படையாகப் பேசக்கூடியவர் மூத்த தலைவரான இல. கணேசன். அவரிடம் அந்திமழை சார்பாக தேசிய மற்றும் தமிழக அரசியல் நிலைகள் குறித்து கேள்விகளை முன்வைத்தோம். தெளிவாகப் பேசினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவின் தயாரிப்புகள் எப்படி இருக்கின்றன?

கட்சியில் அமைப்புரீதியான தேர்தல்கள் இப்போது நடந்து முடிந்திருக்கின்றன. புதியஅகில பாரதத் தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போதுதான் குஜராத் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.அந்த சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகுதான் எல்லா அரசியல்கட்சிகளுமே நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான தயாரிப்புகளில் இறங்கும். பாஜகவைப் பொறுத்தவரை எல்லாக்காலங்களிலும் அமைப்புரீதியான செயல்பாடுகளில் முழுமையான கவனத்துடன் இருந்துகொண்டிருக்கும். எனவே எப்போது தேர்தல்வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம். மார்ச் தொடக் கத்தில் நடைபெறும் பொதுக்குழு,செயற்குழுக் கூட்டங்கள் எங்களை வழிநடத்தும்.

ஆனால், இப்போதே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தான் என்று பேசப்பட்டு வருகிறதே?

இதுகுறித்து நான் பெருமைப்படுகிறேன். பொதுவாக அரசியல்கட்சிகள்தான் ஒருவரைத் தங்களுடைய பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும். ஆனால் பொதுமக்களே நரேந்திரமோடிதான் அடுத்த பிரதமர் என்று முடிவெடுத்துவிட்டார்கள். நரேந்திரமோடி இப்போது கட்சி வேட்பாளர் அல்ல. மக்களின் வேட்பாளராக இருக்கிறார். கட்சியின் உயர்மட்டக்குழு அறிவிக்கவேண்டியதுதான் பாக்கி. அது விரைவில் நடக்கும்.

முன்பு பிரதமர் வேட்பாளர் இடத்தில் இருந்த அத்வானி பிரதமர் ஆகாமலே அந்த இடத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பது பற்றி?

சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டுவிழாக் கூட்டத்துக்கு அத்வானி,மோடி ஆகிய இருவருமே வந்திருந்தார்கள். அந்தவிழாவில் பேசிய ஒரு பெண்மணி, நரேந்திரமோடி அடுத்த பிரதமராக வரவேண்டும்; அத்வானி போன்றவர்கள் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்று பேசிவிட்டார். இந்தப்பேச்சு அத்வானிக்கு மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது. இதற்கு பதிலளிக்க வேண்டிய சோ, தர்மசங்கடமான இந்தக்கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தயங்கி மழுப்பலாக ஒரு பதிலைச் சொல்லி விட்டு அமர்ந்துவிட்டார். அதன்பின் அத்வானி பேசும்போது, ஒருவரிடம் உங்கள் மகன் உங்களைவிடத் திறமையானவன் என்று சொன்னால் அந்தத்தகப்பன் வருத்தப்படுவானா? மாட்டான். மோடியைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்றார். உண்மை இப்படித்தான் உள்ளது.

எதிரணியில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று சொல்லப் படுவது பற்றி...?

 ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் காங்கிரஸ் கட்சிக் குள் வேண்டுமானால் ஒற்றுமை ஏற்படலாம். பிரதமர் பதவிக்கு அவர் தகுதியானவரா என்பது நிருபிக்கப்படாத விஷயம். நரேந்திரமோடி நிரூபித்தவர். ராகுல்காந்திக்குமண்வாசனை தெரியாது. மக்களுடைய கஷ்டங்கள் தெரியாது. அவருடைய ராசி எண் நான்கு. உபியில் நான்கு, பீகாரில் நான்காவது இடம், தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து கிடைத்திருக்கிறது. வருகிற நாடாளு-மன்றத் தேர்தலில் அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் நான்காமிடத்துக்கு வந்தாலும் வியப்பதிற்-கில்லை. ராகுல்காந்திதான் ஆட்சிக்கு வருவார் என்றால் இந்தியாவின் எதிர்காலம் ராகுகாலம் என்று நான் சொல்கிறேன்.

நாடாளுமன்றத்தேர்தலில் எந்தக்கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். இது பாஜக வை பாதிக்கும்தானே?

எந்தக்கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வருமா? என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஊடகங்களும் மக்களும் இயற்கையாகவே அதிமுக பாஜக கூட்டணி வரும் வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தார்கள். அதில் தவறில்லை. ஏனெனில் இப்போதே பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே களஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் எங்களைப் பொறுத்தவரை நரேந்திமோடியைப் பிரதமராக ஏற்கின்ற கட்சிகள் அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கிற கட்சிகளோடு சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம். அதற்கு வாய்ப்பில்லை யென்றால் தனியாகவும் சந்திப்போம்.

ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார்.அதை நோக்கிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?

அது வெளிப்படையாகவே தெரிகிறது. காரணம், அந்த அம்மையாருக்கு விருப்பம் இல்லாமல் எந்த ஒரு விளம்பரத்தையோ எந்த பேச்சையோ அந்தக்கட்சியில் வேறுயாரும் பேசிவிடமுடியாது. அப்படி யாரும் விருப்பப்படலாம் அது சாத்தியமா? இல்லையா? என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும். அந்த எண்ணம் அவருக்கு வரக்காரணம், தேர்தலை முன்கூட்டியே கணிக்கின்ற சிலர், வருகிற தேர்தலின்போது காங்கிரசும் ஆட்சிக்கு வராது பாஜகவும் வராது மூன்றாவதுஅணிதான் ஆட்சியமைக்கப்போகிறது என்று கருத்துச் சொல்லி வருகிறார்கள். அதனால் குஜரால், தேவகௌடா போன்றவர்கள் மாதிரி நாமும் ஆகிவிடலாம் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அப்படி சூழல் அமைய வாய்ப்பேயில்லை.

அப்சல்குருவைத் தூக்கிலிட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்திருக்கிறதே?

நாங்கள் அப்சல்குருவைத் தூக்கிலிட்டதை வரவேற்கிறோம். தேசத்துரோகம் செய்தவர்கள் தூக்கிலிடப்படவேண்டும். அப்சல்குருவின் தூக்கை எதிர்த்து அவருக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களும் தேசத்துரோகிகளே. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்த விமர்சனங்களைக் கருத்தில் கொள்ளலாம். மற்றபடி தூக்கிலிடப்பட்டது நியாயமானது.

மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று பல முன்னாள் நீதியரசர்கள் மற்றும் சட்டவல்லுநர்கள் எல்லாம் சொல்கிறார்கள்...?

நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கொடுமையான குற்றங்களைச் செய்தவர்களை இரக்கமில்லாமல் தூக்கில் போடவேண்டும். அமெரிக்கா ஒரு நள்ளிரவில் வான்வழியாக வந்து தனக்குக் குறியாக இருக்கிற ஒருவர் வீட்டில் இறங்கி உயிரோடு இருக்கிற அவரைச் சுட்டுக்கொன்று உடலையும் எடுத்துச் சென்று கடலில் போட்டுவிட்டு அதன்பின் உலகுக்கு அறிவித்தது. இதை யார் எதிர்த்தார்கள்? இதற்காக அமெரிக்காவைப் பாராட்டுகிறார்கள். இந்தியாவில் அப்படியா செய்திருக்கிறோம். முறையாக விசாரணை செய்து அதன்பின் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் அந்தச் செயலை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

அதையே உலகத்தில் யாரும் எதிர்க்கவில்லை. நாங்கள் அப்படியா செய்யச் சொல்கிறோம்? நாங்கள் முறைப்படி கைது செய்து வழக்கு நடத்தி, வழக்கு நடக்கிற காலத்தில் பிரியாணி கொடுத்துக் கவனித்து தண்டனை கொடுத்த பின் குடியரசுத் தலைவரிடம் கருணைமனு கொடுக்கவும் வாய்ப்புத் தந்து  அவர் பலகாலம் தாமதப்படுத்தி நிராகரித்தார். அதன்பின் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இரவோடிரவாக இதைச் செய்துவிடவில்லை.

387 கோயில்களை இடித்துவிட்டு திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?

இத்தனைக் கொடுமைகளைச் செய்தபிறகும்கூட இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக சாமி கும்பிட முடியும் என்று அவர் நினைக்கக் காரணமே மத்தியஅரசின் பலவீனம்தான். மத்தியஅரசு இலங்கையில் நடந்த படுகொலைகளை தமிழகத்தின் பிரச்னையாக மட்டும் கருதுகிறது. ராஜபக்சேவின் வருகைக்கு நான் மத்திய அரசைத்தான் குற்றம் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல. இந்தியநாட்டின் பிரச்னை.

இந்தமுறை ராஜபக்சே  வந்தபோது பலரும் எதிர்த்தார்கள். பாஜக எதிர்த்தது போலத் தெரியவில்லையே?

எனக்கு அது தெரியவில்லை. ஏதாவது அறிக்கை கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் எல்லா இடங்களிலும் இது மத்திய அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது என்று பேசினேன்.

தமிழகத்தில் தற்போது காதல் திருமணங்கள் குறித்தான பெரும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காதலைப் பற்றி விரிவாகப் பேசும் தகுதி எனக்கில்லை. ஏனெனில் எனக்கு அந்த அனுபவம் கிடையாது. காதல் தவறில்லை, அது புனிதமானது என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் குறிப்பிட்ட சமுதாயத்துப்பெண்களைக் காதலி என்று சொல்வதும் அந்தப்பெண்கள் வயிற்றில் உங்கள் குழந்தை வளரவேண்டும் என்றெல்லாம் பேசுவதை ஏற்கமுடியாது. இன்னொன்று, எந்தசாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுடைய பெண் தங்கள் பேச்சை மதிக்காமல் இன்னொருவருடன் போகிறார் என்பது மிகப்பெரிய சித்திரவதை. பல குடும்பங்கள் அத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அது அனுபவிக்கிறவர்களுக்குத்தான் புரியும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் காதலே தவறு என்கிற மாதிரி இருக்கிறதே?

நான் அப்படிச் சொல்லவில்லை. பெற்றோரை மீறிப்போய்த் திருமணம் செய்துகொள்ளும்போது காதல்திருமணத்தை ஆதரிக்கிறோம் என்று பிரச்சாரம் செய்கிறவர்கள்கூட வருத்தப்படுவார்கள், வேதனைப்படுவார்கள். அத்தகைய வேதனையில் பலர் இருக்கின்ற நேரத்தில் இந்தக்காதலைத் தவறாகப் பயன்படுத்தி இடையில் சிலர் ஆதாயம் தேடுகிறார்கள் என்பதனால்தான் தர்மபுரி சம்பவம் நடந்திருக்கிறது. இந்நிலையில் இருசாராரிடம் ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதைத்தான் பாஜக விரும்புகிறது.

விசுவரூபம் படத்துக்குத் தடை. அதன்பின்னான விவாதங்கள் பற்றிய உங்கள் கருத்து?

கமல்ஹாசன் இந்துத்துவவாதியில்லை.  அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் படமெடுப்பார் என்று நான் நினைக்கவில்லை.  அது பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி அதை அமெரிக்கா முறியடிப்பது போல எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அது ஒரு சினிமா என்று விட்டிருக்கலாம்.

மார்ச், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com